rain-water-for-today-and-tomorrow-thumb

மழை நீர் – நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக.

மழை வரும்போது மயில் போல் ஆடாத மழலை உண்டா? ஒரு துளி வானிலிருந்து விழுந்தவுடன்,  உள்ளத்தில் உவகை கொள்ளாதவர் உண்டா?

எப்போதேனும் உன்னித்து கவனித்ததுண்டா ? மழை நீர் ஒரே ஜதியில் விழாது. அது விழும் இடத்தைப் பொறுத்து அதன் தாளம் மாறும்.

மொட்டை மாடியில் விழும் மழைக்கும், தகர டப்பாவின் மேல் விழும் மழைக்கும், குளத்தின் மேல் விழும் மழைக்கும், காய்ந்த சருகின் மேல் விழும் மழைக்கும் தாளமும் பாவமும் மாறும் .

மழையில் நனைவது மட்டுமல்ல, அதன் ஓசையைக் கேட்பதே ஒரு வகையான தியானம்தான்.

மழை பெய்து ஓய்ந்தவுடன் மறுநாள் சாலை வழிகளில் ஒரு ஈரம் தேங்கியிருக்குமே, தூய்மையும் செழுமையும் கலந்த அந்த உணர்வை ரசிக்காத மனம் உண்டா ?

மழை நின்ற பின் விழும் சாரல் கூட அழகு. மழை முடிந்து வடியும் போது , நம் பாரங்களும் கரைந்து சென்றது போல் மனம் லேசாகிப்போகிறதே, அதுதான் மழை நீரின் மகிமை.

இயற்கையே அழகுதான் , அதிலும் மழை வந்தால் கொள்ளை அழகு.
சிறியவர் முதல் பெரியவர் வரை மழையை ரசிக்காதவர் இல்லை.

மழை நீர் என்பது நமக்கு இறைவன் குடுத்த கொடை . அதை அந்த நேரத்தில் மட்டும் கொண்டாடிவிட்டு, சும்மா ஏன் விடுவானேன்?

நமக்கு பிடித்த பொருளை நம்மோடு வைத்துக்கொள்ளத்தானே ஆசைப்படுவோம்? பின், மழைக்கு மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சனை?

நம் ஒவ்வொரு அணுவிலும் நீருண்டு. ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவன் வாக்கு என்றுமே பொய்க்காது.

நாம் சேமிக்காமல் நழுவ விடும் ஒவ்வொரு சொட்டு மழை நீரிலும் கரைந்து போவது – நம் உயிர் , நம் நிலம், நம் எதிர்காலம் மற்றும் நம் அடுத்த தலைமுறையின் வாழ்க்கை.

கருவாகி உயிராகி நாம் உடலோடு நடமாட நீரே பிரதானம். மழை நீரை சேமிப்போம். நமக்காக. நாட்டுக்காக. நாளைக்காக.