importance-of-rainwater-harvesting-thumb

மழை நீர் சேமிப்பு அவசியமா?

தமிழ்நாடு என்றுமே பார்க்காத கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துகொண்டிருக்கிறது. இதற்கு முதற் காரணமாக விளங்குவது பருவமழை கைவிரித்தலே. என்றாலும், இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க சில வழிமுறைகள் இருக்கின்றன.

அதில் முக்கியமானது மழைநீர் சேகரிப்பு திட்டம். மழைநீரை சேகரித்து குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் உற்பத்திக்கும் என பல்வேறு நலன்களுக்காகவே இந்த திட்டத்தை 2001 ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அறிமுகப்படுத்தியது.

அந்தக் காலமும் இதே போன்ற தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துக்கொண்டிருந்த காலம் தான். அதன் காரணமாகவே செல்வி ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் கட்டிடங்களிலும் கட்டாயமாக்கினார்.

அதன் விளைவாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிலத்தடிநீர் 50% சதவீதம் வரை உயர்ந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அப்போது கொண்டுவந்த திட்டத்தினை பல மாநிலங்கள் முன்மாதிரியாக கருதி செயல்படுத்தி வருகின்றன.

மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன?

மழைநீர் தான் நமக்கு கிடைக்கும் நீராதாரங்களில் மிகவும் எளிமையாகவும் சிக்கனமாகவும் கிடைக்கும் நீராதாரம் ஆகும். தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலம் ஆற்றுநீருக்காக அடுத்த மாநிலத்தை சார்ந்திருக்கும் சூழ்நிலையில் மழைநீர் சேகரிப்பு போன்ற திட்டம் ஒரு அற்புத திட்டம் ஆகும்.

ஆகாயத்தில் இருந்து விழும் மழைநீரை மிக எளிமையான முறையில் சேமித்து வைப்பதே மழைநீர் சேகரிப்பு ஆகும். கட்டிடத்தின் மேற்கூரையில் விழும் மழைநீரை குழாய் மூலம் பூமிக்கு அடியில் ஒரு தொட்டி அமைத்து சேமித்து வைப்பர். அந்த தொட்டியும் நிரம்பும் நிலையில் உபரிநீர் கிணற்றுக்கோ நிலத்தடி நீருக்கோ விடப்படும். 200 சதுர அடி கொண்ட ஒரு வீட்டின் கூரையில் விழும் நீரினை அந்த வீட்டில் இருப்பவர்கள் ஓராண்டு வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கும் இந்தத் திட்டம் தற்போது தொய்வு அடைந்துள்ளதாக கருதுகின்றனர் அரசு நிர்வாகிகள். அது மட்டுமின்றி தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் தற்போது மழைநீரினை சேமித்து வைத்து உபயோகிப்பதை தவிர வேறு எதுவும் சிறந்த மாற்று யுக்தியாக இருக்க வாய்ப்பில்லை. எனவே இது குறித்த விழிப்புணர்வு குறித்து மறுபடியும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

எனவே நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி “TN Water Wise” என்ற திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு மறுபடியும் துளிர்விடும் என அமைச்சர் நம்புகிறார். “மழைநீர் சவால்” என்ற பெயரில் ஒரு சவாலை மாநில மக்கள்முன் வைத்துள்ளார்.

மழைநீர் சவால்

அமெரிக்காவில் விமரிசையாக செயல்படுத்தப்படும் “Ice Bucket Challenge” போன்றது தான் இந்த மழைநீர் சவால். இதை செயல்படுத்தும் முறை அதைவிட மிக எளிதானது தான். மழைநீர் சேகரிப்பு உங்கள் வீட்டில் செயலில் உள்ளது என்று உறுதிமொழி எடுப்பதே இந்த சவால்.

உங்கள் கைப்பேசியில் “நமக்காக! நாட்டுக்காக! நாளைக்காக!” என்ற வாசகத்தின் கீழ் ஒரு காணொளியை பதிவு செய்து நீங்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்ற வேண்டும். உங்களுடைய நண்பர்களையும் உறவினர்களையும் இந்த சவாலை ஏற்கும்படியும் கேட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் இந்த சவாலானது அனைத்து தட்டு மக்களுக்கும் போய்ச்சேரும்.

இதன் மூலம் மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்ச்சி அதிகரிக்கும். மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அதிகரிக்கும். சேமிக்கும் மழைநீரின் அளவும் அதிகரிக்கும். சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மட்டுமே மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த 10% இன்னமும் குறைந்து 5% ஆகிவிட்டது. மக்கள், நகரங்களில் அருகருகே வீடுகளை கட்டிக்கொள்வதாலும் தார் சாலைகள், சிமெண்ட் தரைகள் அமைத்து மூடிவிடுவதாலும் மண்ணின் ஈரப்பதம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, மழைநீர் சேகரிப்பு ஒன்றே நம் கையில் இருக்கும் சிறந்த வழி ஆகும்.

இவ்வளவுமின்றி ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீரில் கடல்நீர் கலந்து பருக முடியாத நிலைக்கு மாறிவிடுகிறது. இவை அனைத்தையும் மழைநீர் சேகரிப்பு மூலம் தவிர்க்கலாம். இவை எல்லாத்துக்கும் மேலாக நிலத்தடிநீர் மிகவும் ஆழமாக இறங்கிவிட்டது. நிலத்தடிநீர் அளவை அதிகரிக்க மழைநீரை சேமித்து வைப்பது சிறந்த வழி ஆகும்.

How to participate in #RainWaterChallenge

சேகரிக்கும் முறைகள்

கட்டிடத்தின் கூரையில் விழும் நீரினை குழாய் மூலம் நிலத்தடியில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் சேமித்து வைப்பதே எளிமையான வழி ஆகும். எனவே, மழைக்காலம் தொடங்கும் முன் கூரையையும் மாடியையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுதல் உசிதம்.

நகரங்களில் அடுக்கடுக்காக கட்டப்படும் வீடுகளால் மழைநீரானது கொஞ்சமும் பயனின்றி சாலைக்கு ஓடி கால்வாய்கள் மூலம் சாக்கடையிலோ கடலிலோ கலந்து வீணாகின்றது. இதைத் தவிர்க்க நிலத்தடி நீரை பாதுகாக்க கட்டிடங்களைச் சுற்றி ஆங்காங்கே 3 அடி ஆழமும் 12 அங்குல விட்டமும் கொண்ட துளைகள் அமைத்து, அவற்றை கூழாங்கல், மணல் முதலியவற்றால் நிரப்பி துளைகள் இடப்பட்ட ‘சிலாப்’கள் கொண்டு மூடிவிடலாம்.

இம்முறையில் சுமார் ஒரு கிரவுண்டு இடத்தில் கட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி சுமார் 5 அல்லது 6 உறிஞ்சு குழிகள் அமைத்து நிலத்தடி நீரின் அளவையும், தரத்தையும் உயர்த்தலாம். ஆனால் சாதாரணமாக இவ்வாறு உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்ட பின் அருகிலுள்ள வற்றிய கிணறுகளில் நீர் மட்டம் உயர இரண்டு வருடங்கள் வரை ஆகும்.

இந்தியாவின் பெரிய பாலைவனமான தார் பாலைவனத்தில் பண்டையகாலம் முதலே மழைநீர் சேகரிப்பு திட்டம் உபயோகத்தில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய தண்ணீர் பிரச்னையை சமாளித்து வருகின்றனர்.

மழைநீர் சேகரிப்பு என்பது செலவல்ல, முதலீடு. அதை ஒரு தேவையில்லா செலவு என்று அலட்சியம் செய்வோரே உண்மையிலேயே செலவு செய்துகொண்டிருக்கின்றனர் என்றால் மிகையல்ல.